தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39.33 கோடி செலவிலான 146 நூலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டார். மேலும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கள்ளக்குறிச்சி நகரில் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
26 புதிய நூல்களை வெளியிடுதல்:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நாட்டுடைமை நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள், அரிய நூல்கள் வெளியீடு ஆகிய திட்டங்களின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரிய நூல்கள் பிரிவில் “தமிழ்நாட்டில் காந்தி” எனும் நூலும், நாட்டுடைமை நூல்கள் பிரிவில் “தமிழர் தலைவர்” (தந்தை பெரியார்), தமிழில் சிறுபத்திரிகைகள், பாரதி நினைவுகள், பாரதியார் சரித்திரம், என் குருநாதர் பாரதியார், நான் கண்ட பெரியவர்கள் ஆகிய நூல்களும், மூத்த வரலாற்று அறிஞர்களின் தமிழ்நாட்டு வரலாறு அரிய நூல்கள் பிரிவில்– பல்லவர் வரலாறு மற்றும் மொகஞ்சதரோ அல்லது சிந்துச் சமவெளி நாகரீகம் ஆகிய நூல்களும், நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் டி.கே.சீனிவாசன் படைப்புலகம் என்ற நூலும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்தடை– ஒரு கண்ணோட்டம், மருத்துவ ஆராய்ச்சி முறைகளும் ஆய்வறிக்கை எழுத எளிய வழிமுறையும், Robert Frost Poems in Tamil, Ramayyan Ammanai (A Tamil Historical ballad) ஆகிய நூல்களும், இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ஆதியும் நடேசன் தாத்தாவும், இரட்டை முனை வாள், எழிலனின் ஆசை, சாதனை, பாட்டிக்கு என்ன பரிசு தர வேண்டும், பூத்த சிறகுகள், அவள் ஒரு தேவதை, கண்டுபிடி கண்டுபிடி, காதல், முகிலைத் தேடி ஆகிய நூல்களும், செவ்வியல் நூல்கள் பிரிவில் பரிபாடல் என்ற நூலும், என மொத்தம் 26 புதிய நூல்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டார்
பொது நூலக இயக்ககம்:
தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மாநிலம் முழுவதும் கல்வி, எழுத்தறிவு மற்றும் அறிவுப் பரவலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் மின் வளங்களைக் கொண்டு அனைத்து வயதினரும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அணுகக்கூடிய மையங்களாக விளங்குகின்றன. இந்த நூலகங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் கல்வி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன.
சென்னை-கன்னிமாரா பொது நூலகம், சென்னை-அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை-கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், என 4,682 நூலகங்களை பொது நூலக இயக்குநரகம் நிர்வகிக்கிறது.
திறந்து வைக்கப்பட்ட புதிய நூலகக் கட்டடங்களின் விவரங்கள்:
தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு 2023-2024-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டம் பகுதி VII-ன் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல்/ தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டடம் 500 சதுர அடி பரப்பளவில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 90 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 32 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 20 நூலகங்களும், என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 31 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலான நூலகக் கட்டடங்கள், 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள் என மொத்தம் 36 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 142 நூலகக் கட்டடங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் 1,069 சதுரடியில் முழுநேர கிளை நூலகம், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம்-2ல் 50 இலட்சம் ரூபாய் செலவில் 1590 சதுரடியில் முழுநேர கிளை நூலகம், ஆலாம்பாளையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 1484 சதுரஅடியில் கிளை நூலகம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் 91 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல்தளத்துடன் 1,883 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலகம்; என மொத்தம் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட மைய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்:
கள்ளக்குறிச்சி நகரில் மாவட்ட மைய நூலகம் நான்கு தளங்களுடன் 14,369 சதுரடியில் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பொது நூலக இயக்குநர் (மு.கூ.பொ) ச.ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் (பொ) மருத்துவர் மா.ஆர்த்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர்-செயலர் முனைவர் சி.உஷாராணி, பொது நூலக இணை இயக்குநர் ச.இளங்கோசந்திரகுமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநர் முனைவர் ப.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






