மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்; ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை; கராத்தே தியாகராஜன் அறிவிப்பு

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பேசி வருகிறார்.
கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
Published on

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலின் அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டார். அதேபோல, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பிளே 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் சென்னை வந்து, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பத்திரிகையாளர்களை

சந்தித்து விளக்குவதற்காக ஓட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது டாக்டர் ரிச்சர்ட் பிளேவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது, ஜெயலலிதாவை ஏன் லண்டனுக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டபோது, டாக்டர் ரிச்சர்ட் பிளே, வெளிநாட்டில் சிகிச்சைக்கு வர ஜெயலலிதா விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், டாக்டர் ரிச்சர்டிடம் பேசும்போது அதே ஓட்டலில் நானும் இருந்தேன். ஆகவே ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com