

சென்னை,
திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி (அதாவது இன்று) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் இன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.