“மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லுவார், ஏமாந்து விடாதீர்கள்” - திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லுவார், ஏமாந்துவிடாதீர்கள் என்று திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
“மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லுவார், ஏமாந்து விடாதீர்கள்” - திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு தமிழகத்திலே 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம்அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டு காலத்திலே மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி இருக்கின்றோம். இன்றைக்கு,அ.தி.மு.க. ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். நான் 2011-ல் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது திருச்செங்கோடு மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளேன். முதல்-அமைச்சர் ஆன பிறகு நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. அரசு.

நான் ஏற்கனவே திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றேன். அப்போது என்னை நாடாளுமன்ற உறுப்பினராக பார்த்திருக்கின்றீர்கள். தற்போது முதல்-அமைச்சராக பார்க் கின்றீர்கள். இப்பொழுதுகூட நான் முதல்-அமைச்சர் அல்ல, உங்கள் அனைவரையும் முதல்-அமைச்சராக பார்க்கின்றேன். நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு பொறுப்பாளராகதான் என்னைப் பார்க்கின்றேன். நீங்கள் நினைப்பதை நிறைவேற்றுகின்ற அரசு எங்கள் அரசாகதான் இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பு ஏற்கின்றபோது எவ்வளவு சிரமம் என்று நீங்கள் எண்ணி பார்க்கவேண்டும். பலபேர் நம்பவே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 நாட்கள் இருப்பாரா, ஒரு மாதம் இருப்பாரா, 6 மாதம் இருப்பாரா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இன்றைய தினம் 3 ஆண்டுகள் 10 மாத காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகின்றேன்.

பிரதமருடன் காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் மிகச்சிறப்பாக கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது, இதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு கேரளா மற்றும் டெல்லி மாநிலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்புமு.க.ஸ்டாலின் சொன்னார். அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். தற்பொழுது என்ன நடக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் நபர்கள் முதல் 10 ஆயிரம் நபர்கள் வரை இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

அங்கிருக்கும் மக்கள்தொகை தமிழகத்தை ஒப்பிடும்போது பாதிதான். அந்த மாநிலங்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் எண்ணிக்கையில்தான் பரிசோதனை செய்து வருகின்றார்கள். ஆனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். டெல்லி ஒரு சிறிய மாநிலம் அந்த மாநிலத்தில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் நபர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேற்றைக்கு 1005 நபர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் எங்கும் கிடையாது. அ.தி.மு.க. அரசு இதையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு, ரவுடித்தனம்தான் இருந்தது. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே புரோட்டக்கடையில் நன்றாக சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் மூக்கை உடைக்கின்றார்கள். அதற்கு மு.க.ஸ்டாலின் போய் கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறார். தி.மு.க. தலைவர் கட்டப்பஞ்சாயத்து தலைவராகிவிட்டார்.

அதேபோல் அழகுநிலையம் சென்று தி.மு.க. மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பெண்ணை காலால் உதைக்கின்றார். செல்போன் கடைக்குச் சென்று அக்கடையின் உரிமையாளரை அடிக்கின்றார்கள். தேங்காய் கடைக்குச் சென்று தேங்காய் வாங்கிக்கொண்டு அந்த கடை உரிமையாளரை அடிக்கின்றார்கள். இதற்கு மேலாக கோவையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் சென்றுக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தகாத முறையில் ஈடுபட்டதின் காரணமாக வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி அராஜக செயலில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வினர்தான். இந்த அராஜகத்திற்கு சவுக்கு அடி கொடுத்து சட்ட ரீதியாக சந்தித்து சட்டத்தை நிலைநாட்டுகின்றோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லுவார், ஏமாந்து விடாதீர்கள். தேர்தல் அறிக்கையிலே நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார், கொடுத்தாரா? அனைத்தும் பொய் அறிக்கை, மக்களை ஏமாற்றுகின்ற அறிக்கை, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ஆகவே 2021 சட்டமன்ற தேர்தலிலே அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றிபெறச் செய்யவேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com