நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் - முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

‘நீட்’ மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் - முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி 7 மாநில மாநில முதல்-மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடுவதைப்போல, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதல்-மந்திரிகளும் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் எனக்கோரி அம்மாநில முதல்-மந்திரிகளுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாங்கள் நலமாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே ஜூன்- 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றால், கிராமப்புறங்களும், மலைப்பகுதிகளும் பிற முக்கிய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. விமானம், ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாததுடன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

மேற்கு வங்காளம், மராட்டியம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கார் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதல்-மந்திரிகள் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலே விளக்கப்பட்ட கடுமையான சிக்கல்களையும், மாணவர்களின் நல்வாழ்வையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com