மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை அரசு செயலாளர் ஸ்வர்ணாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில கவர்னருக்கு அனுப்ப 18-11-2019 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

மேலும் அக்கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், அதன் பரிந்துரை தேர்வுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்?. அவர்களின் பயோ-டேட்டா விவரங்கள் உள்ளிட்ட எந்த தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. மிகவும் அவசியமான மேற்கண்ட அடிப்படைத் தகவல்களே கடிதத்தில் இணைக்கப்படாததால் தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து தேர்வுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமாக இருக்காது

விண்ணப்பித்தவர்களின் விவரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஒரு தேர்வினை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பதும், முன்கூட்டியே மாநில தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்து விட்டு பெயரளவிற்கு இந்த கூட்டத்தை நடத்துவதாக நான் கருதுகிறேன்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பது மட்டுமின்றி, தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன்.

ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத மேற்கண்ட பொருள் குறித்த தேர்வுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com