அ.தி.மு.க., பா.ஜ.க.வை தோற்கடிப்பதே தி.மு.க.வின் லட்சியம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வை தோற்கடிப்பதே தி.மு.க.வின் லட்சியம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க.வை தோற்கடிப்பதே தி.மு.க.வின் லட்சியம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தொண்டன் வேறு தலைவன் வேறு என்ற பாகுபாடின்றி தோளோடு தோள் நின்று பயணிக்கும் குடும்பப்பாசமிக்க இயக்கம் தான் தி.மு.க. அப்படித்தான் கருணாநிதி நம்மை ஊட்டி வளர்த்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் முகம் கூட காணாத தொண்டனுக்கும் நான் தலைவன். இது பதவியல்ல, இடையறாது பணியாற்றிடத் தந்திருக்கும் பொறுப்பு. அதனை உணர்ந்து அனைவரையும் இன்முகத்துடன் பாசம் காட்டி அரவணைத்து உங்களுடன் பயணிக்க வேண்டியவன் நான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

தனிப்பட்ட என்னை விட, நீங்கள் அனைவரும் முக்கியம்; அதைவிட உங்களை உள்ளடக்கியிருக்கும் தி.மு.க. தான் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். தி.மு.க.வை காக்கும் பணி என்பது தமிழைக் காக்கும் பணி, தமிழ்நாட்டின் உரிமை மீட்கும் பணி, தமிழர்களின் வாழ்வைக் காக்கும் பணி, திராவிட இனத்தின் வெற்றியை நிலைநாட்டும் பணி. இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு எங்கெங்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அவ்வப்போது தகர்த்து மோதி, தவிடுபொடியாக்கி, வெற்றி காணவேண்டிய பயணத்தை லட்சிய தீபம் கையில் ஏந்தி நிறைவேற்றிட வேண்டிய இன்றியமையாக் கடமை உள்ளவர்களாக நாம் இருக்கிறோம்.

நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு. ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத ஊழல் கறை படிந்த அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது. மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.

இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அதன் அடுத்த கட்டமாக, மாநில உரிமை என்ற பயிரை வளர்க்க வேண்டிய பெரும்பணி இருக்கிறது. மத்தியில் ஆள்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்து கூட வரலாம்.

எப்படி வந்தாலும், எந்தத்தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. கொள்கை ரீதியான தோழமை சக்திகள் நம்முடன் இணைந்து நிற்கின்றன. அதில் குழப்பம் ஏற்படுத்தலாமா என நினைத்து குறுக்குசால் ஓட்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அவர்தம் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நம் பயணம் உறுதியானது. நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போதுதான் உதடுகள்கூட ஒட்டும் என்றார் கருணாநிதி. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப்பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை கருணாநிதிக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com