

சென்னை,
உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டங்களின் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் மற்ற நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
தீர்வு காணும் பெட்டிக்கு வரவேற்பு
மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி வைக்கப்பட்ட தீர்வு காணும் பெட்டி தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நேரடியாக ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியாத போது தங்களின் மனக்குமுறலை வார்த்தைகளாக மனுவில் வடித்து எழுதி போட்டு வருகின்றனர்.
இந்த மனுக்கள் உடனடியாக அங்கிருந்து எடுக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி அதிகப்படியான புகார்கள் வந்த சில நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் நேரடியாக கூப்பிட்டு எச்சரித்ததாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை மற்ற நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது.
நேற்றைய கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
மாவட்டத்தில் கிராம அளவில் உள்ள ஒவ்வொரு பூத்துக்கும் 20 பேர் கொண்ட குழுவை நீங்கள் அமைக்க வேண்டும். இதில் 5 பேர் பெண்களாகவும், 5 பேர் இளைஞர்களாகவும் 10 பேர் கட்சி நிர்வாகிகளாகவும் இருக்க வேண்டும். இந்த பட்டியலை 30-ந்தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கிளை கழக நிர்வாகிகள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பட்டியல் சரிவர தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பதை கட்சியின் தலைமை கழகம் பரிசீலித்து முடிவு செய்யும். நீங்கள் அனுப்பும் பட்டியல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும்.
2 நாட்களாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நீங்கள் பல விஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிலர் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறீர்கள். அந்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தொண்டர்களின் விருப்பம்
மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தொண்டர்களின் விருப்பம், கட்சியின் நலன் கருதி நடந்து கொள்ள வேண்டும். உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளக்கூடாது. உங்கள் மீதான தவறை களைந்து, குற்றச்சாட்டுகள் வராத அளவுக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
7-ந்தேதி காலையில் ஈரோடு வடக்கு, மாலை ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.