

பெரம்பலூர்,
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்த கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகளவு மக்கள் ஆதரவு உள்ளது. எங்களுக்கு இப்போதுகூட ஆயிரக்கணக்கான மக்களை திரட்டுகிற சக்தி இருக்கிறது. ஜனநாயகத்துக்காக, நாட்டு நலனுக்காக, தமிழ் மண்ணின் உரிமைகளுக்காக எங்களால் ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்தும் களமாட முடியும். தனித்தும் களமாட முடியும்" என்று கூறினார்.
"இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரும்; தவெக ஆட்சி கவிழும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், பழுத்த அரசியல் தலைவர், கருணாநிதி போன்ற தலைசிறந்த அரசியல் தலைவரிடம் அரசியல் பயின்றவர். ஜனநாயகத்தில் இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையது அல்ல.
இப்போதுதான் புதிய அரசு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அந்த அரசுக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே மக்கள் அளித்த தீர்ப்பை நாம் வழிமொழிய வேண்டும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினும், ஜனநாயகத்தின் வழிநின்று சட்டப்படி தவெக ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்ல வேண்டும். எனவே இத்தகைய கருத்துகள் அவரது உயரத்திற்கு பொருத்தமானது அல்ல" என்று கூறினார்.