

மதுரை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில், 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, 50 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்கா, மதுரை மாநகராட்சி, கரிமேட்டில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கூரான் நவீன அறிவியல் மையம், 1 கோடியே 67இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள HP கணினி திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வடபழஞ்சி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பினாகிள் இன்போடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 150 கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டப் பணியின் விவரங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் வாடிப்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களை சார்ந்த 867 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அங்கூரான் நவீன அறிவியல் மையம் திறப்பு
மதுரை மாநகராட்சியில் கரிமேட்டில் 12,000 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பினாகிள் இன்போடெக் மற்றும் அங்கூரான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து அமைத்துள்ள அங்கூரான் நவீன அறிவியல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அனுபவ அறிவியல் கற்றல் மூலம் புதுமைகளை வளர்க்கும் வகையில் இந்த அறிவியில் மையத்தில், மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதத்தில் பரிசோதனைகளுக்கான ஆய்வகங்கள், மின் மற்றும் இயந்திர மாதிரிகள் மற்றும் ரோபோக்களை உருவாக்குவதற்கான வசதிகள், கணினி பயிற்சி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் மூலதன மானிய நிதி மற்றும் பொது நிதியின் கீழ், அரண்மனைக்காரர் தெருவில் 1 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடம் மற்றும் மன்ற கூட்ட அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள HP கணினி திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த கணினி மையத்தில் உயர் செயல்திறன் கொண்ட 50 எண்ணிக்கையிலான HP டெஸ்க்டாப் கணினிகள், அதிவேக இணைய இணைப்பு, நவீன டிஜிட்டல் கற்றல் மென்பொருள் மற்றும் உற்பத்தித்திறன் கருவிகள், ICT அகாடமி மூலம் பயிற்சி ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் இரண்டையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 14.30 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சுமார் 1,200 பணியாளர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள ஊழியர் குடியிருப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே மதுரை, இலந்தைக்குளம் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2.41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 150 கோடி ரூபாய் முதலீட்டில் ஹெச்சிஎல்டெக் நிறுவனம் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இது தென் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.