ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் உள்பட ரூ.738 கோடியில் திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

20 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் உள்பட ரூ.738 கோடியில் திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேராவூர் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை 9.45 மணி அளவில் அங்கிருந்து விழா நடைபெறும் மேடைக்கு வருகிறார். அந்த திடலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார். பின்னர் மாவட்ட தொழில் மையம், தாட்கோ துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட பலருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து விழா மேடைக்கு வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வரவேற்று பேசுகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட நடந்து முடிந்த ரூ.738 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும் பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

தொடர்ந்து பகல் 11 மணி அளவில் அவர் காரில் புறப்பட்டு மதுரை வருகிறார். பின்னர் விமானத்தில் சென்னை செல்கிறார். இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தை அடுத்த புல்லங்குடி பகுதியில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மின்னொளியில் நேற்று இரவில் விழா திடல் ஜொலித்தது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை தி.மு.க. கொடிகள் இருபுறமும் கட்டப்பட்டு உள்ளன.

சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com