ஆபத்தை உணராத சட்டமன்ற உறுப்பினர், பாராட்டி மகிழும் பேரவை துணை தலைவர்; விவசாய தொழிலாளர் சங்கம் விமர்சனம்

2014 ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் அமைந்த மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நடைமுறையில் சிதைத்து அழித்து வந்தது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொது செயலாளர் பாஸ்கர்
பாஸ்கர்
Published on

சென்னை,

ஆபத்தை உணராத சட்டமன்ற உறுப்பினர், பாராட்டி மகிழும் பேரவைத் துணை தலைவர் என்று விவசாய தொழிலாளர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொது செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

அடிப்படை புரிதல்

தமிழ்நாடு சட்ட பேரவை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.விக்னேஷ், 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பேசியுள்ளார். அவர், அந்த திட்டத்தை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பெரும் குழப்பத்தில் இருப்பதை அவரது உரை வெளிப்படுத்தியுள்ளது.

சட்டபூர்வ உரிமை

நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இருந்த இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், அப்போது அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு 2005 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம், ஊரகப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை அளிக்கப்பட்டது.

26 கோடி தொழிலாளர்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தேர்வு செய்து, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் நாடு முழுவதும் 26 கோடி தொழிலாளர்கள் அரைகுறை வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்த திட்டத்தால் வறுமை நிலை குறைந்துள்ளது.

வேளாண் உற்பத்தி அதிகரிப்பு

புலம்பெயர்ந்து செல்லும் துயரம் தணிந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட பல நற்பயன்கள் கிடைத்து வந்தன. பல்லாயிரக்கணக்கில் சமூக சொத்துக்களும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக 100 நாள் வேலை திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பாராட்டுகளையும் பெற்று வந்தது.

புதிய திட்டம்

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் அமைந்த மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நடைமுறையில் சிதைத்து அழித்து வந்தது. கடைசியாக கடந்த 2025 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை மாற்றி, வளர்ந்த பாரதம் - ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

நிதி சுமை

இதன் மூலம் மகாத்மா காந்தியின் பெயரை அழித்தொழித்து விட்டு, மாநிலங்கள் தலையில் நிதி சுமையை ஏற்றியுள்ளது. பழைய திட்டத்தில், திட்டப் பணிகளுக்கான செலவுகளுக்கு 100 சதவீத நிதியும் மத்திய அரசு வழங்கி வந்தது. புதிய திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும், 40 சதவீத நிதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5000 கோடிக்கும் மேல் நிதி செலவு கூடியுள்ளது.

முதல்-அமைச்சர் கடிதம்

பாஜக மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கைக்கு எதிராக சட்ட பேரவையில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய முதல்-அமைச்சர் சி ஜோசப் விஜய் கடுமையான குரலில் கடிதம் எழுதியுள்ளார்.

அறியாமை

இந்த விபரங்கள் எதனையும் அறிந்து கொள்ளாத நிலையில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் விக்னேஷ் குழப்ப உரையாற்றினார். அது பேரவை பதிவேடுகளில் பதிவாகியுள்ளது. அமைச்சர்கள் உட்பட உறுப்பினர்கள் பேரவைக்கு தவறான தகவல்களை தந்தால், அதனை திருத்த வேண்டிய கடமை பொறுப்பில் இருந்த பேரவை துணை தலைவர் எம்.ரவி சங்கர், இவர் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் ஆற்றிய குழப்ப உரையை பாராட்டி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறி, வாழ்த்துகளை தெரிவித்து தனது அறியாமையை வெளிப்படுத்தி கொண்டார்.

ஆட்சேபனை

சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறித்துள்ள பாஜக மத்திய அரசின் வஞ்சக செயலை கண்டிக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரவை துணை தலைவர் ஆகியோரின் குழப்ப பேச்சுக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தனது ஆட்சேபனையை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com