

சென்னை,
இலவசங்கள் குறித்த வழக்கில் திமுக பற்றி சுப்ரீம் கோர்ட்டு செய்த விமர்சனம் குறித்து திமுக முன்னாள் எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"யாருக்கு என்ன தேவையோ அதை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை இலவசம் என்று யாரும் கேலி பேசி விடக்கூடாது. கல்வி, மருத்துவம், உணவு இது மூன்றிலும் எதை அரசாங்கம் செய்தாலும் அதை ஒரு முதலீடாக கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் பேசும் போது கூட ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு அரசாங்கத்தின் கொள்கை முடிவை நாங்கள் எப்படி எதிர்கொள்வது, அதை தவறு என்று எப்படி சொல்வது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்கள்.
எங்களுடைய வக்கீல் பேசும்போது ஒரு கருத்தை சொல்லியிருக்கிறாரே தவிர தனிப்பட்ட முறையிலே திமுகவை குறைத்து சொல்லுகிற அல்லது திமுக வழங்கிய இது தவறு என்று சொல்லுகிற அளவிலே ஒன்றும் நடைபெறவில்லை."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.