

சென்னை,
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் , திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் இன்று (23.07.2026) திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கலையரங்கில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், புழல், சோழவரம், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, மாதவரம், திருவெற்றியூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட சாலையோர உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் உணவுப் பொருள் கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறை, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அமைச்சர் அவர்கள் இக்கண்காட்சிகளை பார்வையிட்டு, அதன் செயல்முறைகளை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் துருப்பிடிக்காத எக்குவால் (stainless-steel) வடிவமைக்கப்பட்டிருந்த உணவு வண்டிகளை பார்வையிட்டார்.
இம்முகாமில் அமைச்சர் அவர்கள் தலைமையில் சாலையோர உணவு விற்பனையாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பதிவு சான்றிதழ், உணவுப் பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ், மருத்துவத் தகுதி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் Breaks India, Pan Oleo Energy Ltd, Udhayam Agro Foods, Grace Pvt Ltd ஆகிய நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்ட உணவு வண்டிகளை 5 சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:-
மருத்துவத்துறையில் நோய் வந்த பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் குணப்படுத்துவது இதைப்பற்றி மட்டுமே சிந்தித்து வந்தோம். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு நோய் வருவதற்கு முன்பே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதில் முக்கிய பங்கு என்பது சுத்தமான, சுகாதாரமான உணவு தான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு. உணவு இல்லாமல் பசியோடு எந்த ஒரு நபரும் இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய முதல்-அமைச்சர் அவர்களின் எண்ணம். மக்களின் பசியை போக்குவதில் சாலையோர உணவு விற்பனையாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த விலையில் சுத்தமான, சுகாதாரமான உணவினை சாலையோர உணவு விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 50,000 சாலையோர உணவு விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் ஆலோசித்த போது சாலையோர உணவகங்களில் சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனதெரிவித்தார். அதற்கு நாம் சமைக்கும் உணவினை சுத்தமாக குறிப்பாக உணவிற்கு பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் இதர உணவுப் பொருட்களை தூய்மையாக சுகாதாரத்துடன் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். பிறப்பபொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே இந்த அரசின் கொள்கை, இந்த மண்ணின் கொள்கை. மருத்துவம் எப்படி ஒரு புனிதமான தொழிலோ அதுபோன்று உணவு வழங்குவது என்பதும் ஒரு புனிதமான தொழில். சாலையோர உணவு விற்பனையாளர்கள் பல பேரின் பசியை போக்குகின்ற இடத்தில் நான் இருக்கிறேன் என்ற ஒரு கர்வத்துடன் நீங்கள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுத்தமான சுகாதாரமான உணவினை வழங்குகிறோம் என்ற பொறுப்பும் நமக்கு இருக்க வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் உணவு சங்கிலி முறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் உணவு பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டபொழுது தமிழ்நாடு முழுவதும் மாதிரி உணவு தெருக்களை உருவாக்கலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மாதிரி உணவு தெருக்களில் வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் இருக்கும். இத்தெருக்களில் வியாபாரிகளுக்கு துருப்பிடிக்காத எக்குவால் ஆன உணவு சமைக்கும் வாகனங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பிரேக் இந்தியா (Breaks India) போன்ற நிறுவனங்களின் சார்பில் 5 விற்பனையாளர்களுக்கு உணவு விற்பனை வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் மாதிரி உணவு தெருக்கள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் முதலில் ஒரு தெரு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பொது மக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு வழிமுறைகளின்படி சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்கும். இதுபோன்று திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விதிமீறல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். சாலையோர உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் தங்களுடைய உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும்.
ஏனெனில் பலருக்கு உணவு வழங்கும் நமக்கு ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால் அது பிறருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது நம்முடைய உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சாலையோர உணவு விற்பனையாளர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு மிக முக்கியமானது. பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவினை வழங்குவோம், வியாபாரத்தையும் பெருக்குவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் / உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால்வேனா, இ.ஆ.ப., உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் நாகராணி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.