சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் பொதுவாக பனிக்காலம், டிசம்பர் மாதத்தின் பிற்பாதியில் அதாவது, மார்கழியில் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் தற்போதே பனியின்தாக்கத்தை பல இடங்களில் உணர முடிகிறது. அதுவும் மலைப்பிரதேசங்களில் பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஊட்டியில் உறைபனி ஏற்படுவதையும் செய்திகளில் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட நிலையில், மழைக்கான அறிகுறி தெரியவந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று, தென் சீனக்கடலில் இருந்து வருவதாலும், இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாக இருப்பதாலும் தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு மழைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி. கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதைபோல சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

X