கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை
Published on

வெப்பசலனம் காரணமாக...

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.அதன்படி, கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பசலனத்தால் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, இதமான காற்று வீசத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காற்றுடன் மழையும் பெய்ய ஆரம்பித்தது. சென்னையை பொறுத்தவரையில் மாலை 4.30 மணிக்கு மேலும், புறநகரை பொறுத்தவரையில் மாலை 4 மணிக்கு மேலும் மழை பெய்தது.

சென்னையில் மழை

சென்னை எழும்பூர், தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, தரமணி, பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், பொத்தேரி உள்பட சில இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்தது.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், சென்னையில் நேற்று மழை பெய்த நிலையில் சாலைகளில் வாகன ஓட்டிகளின் நடமாட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அவ்வாறு மழைக்கு நடுவே கடந்து சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

பொது மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயில் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலுக்கு மத்தியில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் சில நிமிடங்களே இந்த மழை பெய்தாலும், வெப்பம் தணிந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல், இன்றும் (வெள்ளிக்கிழமை) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com