‘பெகாசஸ் விவகாரத்தில் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தொடர்பு’ தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயங்குவது ஏன்? பெகாசஸ் விவகாரத்தில் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டினார்.
‘பெகாசஸ் விவகாரத்தில் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தொடர்பு’ தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயல்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள், உள்ளாட்சி தேர்தலையொட்டி கிராமங்கள்தோறும் கட்சிக்கு ஆற்றவேண்டிய தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.

இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:-

பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் எந்தவித விசாரணையையும் முன்னெடுக்க மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. ஆனாலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் பயப்படுவதும், தயங்குவதும் ஏன்? இதில் இருந்து பெகாசஸ் விவகாரத்தில் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தொடர்பு உள்ளது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற சிலரே ஆதாயமடைகிறார்கள். சராசரி மக்கள் அனைவரும் பரிதவித்து வருகிறார்கள். குற்றவாளிகள் கையில் நாடு சிக்கிவிட்டதோ என்றே பயப்படத் தோன்றுகிறது. பெட்ரோல்-டீசல், கியாஸ், விலைவாசி எல்லாமே உயர்ந்துவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாயை திறக்க மறுக்கிறார்.

அசாம்-மிசோரம் எல்லை பிரச்சினையில் 2 மாநில போலீசாருக்கும் மோதல் வெடித்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க அமித்ஷா தவறிவிட்டார். பெட்ரோல் விலை போல இரு மாநிலங்கள் இடையே பகையை வளர்த்துவிடும் நடவடிக்கையே நடக்கிறது. பேச்சுவார்த்தைக்கு சென்ற காங்கிரஸ் குழுவும் தடுக்கப்பட்டது அநியாயத்தின் உச்சம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com