மோடி உங்கள் நண்பர்: காங்கிரஸ், தி.மு.க. தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகள் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சொல்கிறார்

தமிழகத்தின் நண்பர் மோடி என்றும், காங்கிரஸ், தி.மு.க. தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகள் என்றும் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
மோடி உங்கள் நண்பர்: காங்கிரஸ், தி.மு.க. தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகள் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சொல்கிறார்
Published on

சென்னை,

மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், மீனவர்களின் குறைகளை கேட்கவும் பா.ஜ.க. மீனவரணி சார்பில் சென்னை மெரினா அருகே உள்ள மாட்டாங்குப்பத்தில் நேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார். இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு, மாநில மீனவரணி தலைவர் எஸ்.சதீஷ்குமார், மாநில செயலாளர்கள் கமலகண்ணன், சவுந்தர், துணைத்தலைவர் கொட்டிவாக்கம் மோகன், மகளிரணி மாவட்ட தலைவி என்.வரலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

நிரந்தர எதிரிகள்

மோடி என்ன செய்தார் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஜன்தன் வங்கி கணக்கு, உஜ்வாலா கியாஸ் திட்டம், தமிழ்நாட்டில் 11 மருத்துவக்கல்லூரி, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் என தமிழகத்திற்கு நன்மை தரும் திட்டங்களை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார்.

தமிழகத்தின் நண்பர் மோடி. காங்கிரஸ், தி.மு.க. தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகள். ஊழல், வாரிசு அரசியல் தான் திராவிட அரசியலா?. பெண்களுக்கு தொல்லை கொடுப்பது, இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது, தமிழ் கலாசாரத்தை சீரழிப்பதுதான் திராவிட கலாசாரமா?. உண்மையான திராவிட கலாசாரம் என்பது, கடவுள் முருகனை வழிபடுவதுதான்.

சட்டசபைக்கு அனுப்பவேண்டும்

பேரரசர் ராஜராஜ சோழன் ஆட்சி செய்யும் தன்னுடைய ஆளுகையை உலகம் முழுவதும் கொண்டு சென்றார். ராஜராஜசோழன் தான் நம்முடைய பெருமை. தி.மு.க. குடும்பம் நமக்கு பெருமை அல்ல. 2ஜி உள்பட பல்வேறு ஊழல்கள் மூலம் தி.மு.க. தமிழகத்துக்கு அவமானம் தேடி கொடுத்தது.

அனைத்து தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறார். அதிகமாக பெற்றது தமிழகம் மட்டுமே. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.வில் இருந்து ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ., தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.வை சட்டசபைக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com