மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது

சென்னையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது
Published on

சென்னை,

சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி அன்று மாலை 3.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முதலில், மத்திய அரசின் நலத்திட்டங்களை தொடங்கிவைக்கும் அவர், பின்னர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

பிரமாண்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக தளம் அமைக்கும் பணிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிளாம்பாக்கத்தில் அ.தி. மு.க. கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இதே இடத்தில் மோடி, பிரதமர் ஆவதற்கு முன்பு (கடந்த நாடாளுமன்ற தேர்தலில்) பேசினார். அதன்பின்னர் பிரதமராக பதவி ஏற்றார். மீண்டும் இதே இடத்தில் மோடி பேசுகிறார்.

எனவே மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com