கழிவறை பகுதியில் அம்மா கிளினிக்; அவை குறிப்பில் இருந்து நீக்குக: காரசார விவாதம்

கழிவறை பகுதியை சீர்செய்து அம்மா கிளினிக்குகளை நடத்தினார்கள் என அமைச்சர் பேசிய நிலையில் அவையில் காரசார விவாதம் நடந்தது.
கழிவறை பகுதியில் அம்மா கிளினிக்; அவை குறிப்பில் இருந்து நீக்குக: காரசார விவாதம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பேசும்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கழிவறைகளையும், சுடுகாட்டு பகுதிகளையும் சீர்செய்து அம்மா கிளினிக் நடத்தினார்கள். அதனை நேரில் அழைத்து சென்று காட்ட தயார் என கூறியுள்ளார்.

இந்நிலையில், அவையில் குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கழிவறையில் கிளினிக்குகள் அமைக்கப்பட்டது என கூறுவது, அந்த திட்டத்தினை சிறுமைப்படுத்துவதுபோல் உள்ளது.

அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுந்து பதிலளித்து பேசும்போது, அமைச்சர் ஆதாரம் வைத்து கொண்டு பேசுகிறார். அ.தி.மு.க. அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், இடைக்கால நடவடிக்கையாக அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இது தற்காலிக திட்டம். மக்களை தேடி மருத்துவ திட்டம் உள்ளது. அதனால், அம்மா கிளினிக் தேவையற்ற ஒன்றாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதன்பின் அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அம்மா உணவகம் மூடப்படுவதற்கான முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபடுகிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று கூறினார்.

இதற்கு, கடந்த காலங்களில் கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை மூடியதால்தான் ஆட்சியை இழந்தீர்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனால், அவையில் காரசார விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com