

தூத்துக்குடி,
சாத்தான்குளம் அருகே சாஸ்தா கோவிலில் 5 கதவுகள், 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், சி.சி.டி.வி. கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். எந்திரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் ஸ்ரீநெட்டுவான்கோட்டை ஹரிஹர சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். வழக்கமான பூசாரி முத்துப்பாண்டி, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்குச் சென்றிருந்ததால், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ராஜா என்பவர் தற்காலிகமாக பூஜை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பூஜை நடத்துவதற்காக ராஜா கோவிலுக்கு சென்றபோது, அங்குள்ள 5 கோவில் கதவுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. இதுகுறித்து அவர் கோவில் தர்மகர்த்தா ஆலங்கிணறு துரைராஜிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த தர்மகர்த்தா துரைராஜ் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு, சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கதவுகளை உடைத்தபோதிலும், அங்கிருந்த விலைமதிப்பபான வேறு பொருட்கள் எதையும் திருடவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், உண்டியலில் இருந்த சுமார் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை மறைக்கும் நோக்கில், அதன் டி.வி.ஆர். (DVR) எந்திரத்தையும் சேர்த்து மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். கோவிலில் தங்க, வெள்ளி நகைகள் இல்லாததால் அவை தப்பியுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கோவிலில் திருடர்களின் கைரேகைப் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவில் தர்மகர்த்தா துரைராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.