பணம் பிரச்சினை: பெண்ணை துன்புறுத்திய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

நாங்குநேரியில் பணம் பிரச்சினையில் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஆவார்.
பெண்ணை துன்புறுத்திய வழக்கு குற்றவாளி
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பணம் பிரச்சினையில் பெண்ணை துன்புறுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பணம் பிரச்சினை- பெண்ணை துன்புறுத்திய வழக்கு:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே 2022-ம் ஆண்டு பணம் பிரச்சினை காரணமாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த பிரேமா (வயது 36), அவரது தாயான அருணாச்சலம்(54) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த வானுமாமலை(47) என்பவர் அசிங்கமாக பேசி அவரை துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது நாங்குநேரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளியான வானுமாமலை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, சார்பு நீதிமன்ற நீதிபதி ரஷ்கின்ராஜ் இன்று (25.6.2026) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விவரம் பின்வருமாறு:

294 (b)-ன்படி ரூ.1,000 அபராதம். அதை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை. 4 of TNPHW Act-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏக காலத்தில் (Concurrent ) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி:

இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான வானுமாமலை, 2015-ம் ஆண்டு நாங்குநேரியில் நடைபெற்ற கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை கைதியாக பாளை மத்திய சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த டி.எஸ்.பி. சம்பத் (பொறுப்பு DCB-II), நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ராஜாராம், வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த முதல் நிலை காவலர் முருகன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ்பால் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com