

மானூர் ஊராட்சி ஒன்றியம் நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் யாசர் அராபத். இவர் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் பற்றிய பேச்சு போட்டியிலும், கடந்த 4-ந்தேதி நடந்த கலைஞர் கருணாநிதி பற்றிய பேச்சு போட்டியிலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். அதற்காக சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மாணவர் யாசர் அராபத்துக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.
அந்த பணத்தை மாணவர் யாசர் அராபத் தான் படித்து வரும் நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் வளர்ச்சி பணிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் கவுரியிடம் வழங்கினார். அந்த மாணவரை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டினர்.