இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரிகளில் மாணவர்கள் மோதல் என்ற செய்தியைத் தாண்டி, தற்போது பள்ளிகளிலும் மாணவர்கள் மோதிக்கொள்ளும் தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. உச்சகட்டமாக, திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் சிறிய கற்களை வீசி விளையாடிக் கொண்டிருந்தது, பெரும் விபரீதமாக உருமாறியுள்ளது. இது தொடர்பாக கட்டிடத் தொழிலாளியின் மகனிடம் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்ததுடன், அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த மாணவர் உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் போலீஸார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

விளையாட்டும், அதன் விளைவுகளும் மாணவர் ஒருவரின் உயிரைப் பலிவாங்கியதுடன், 3 பேரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் மோதிக் கொள்ளும் போக்கு எதில் போய் முடியும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

சமீபகாலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன. அண்மையில் விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தருமபுரியில் மாணவ, மாணவிகள் சேர்ந்து வகுப்பறையில் உள்ள நாற்காலிகளை அடித்து உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இவையெல்லாம் அரசுப் பள்ளிகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைக்கின்றன.

கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டிய கல்வி நிலையங்களில் பாகுபாடுகளும், மோதல்களும், வன்முறையும் வெடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, கற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. இளைய தலைமுறை வன்முறைப் பாதையில் பயணிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தி, சக மாணவர்களை இழிவுபடுத்தல், வன்முறை, பழிவாங்கும் போக்கு உள்ளிட்டவற்றை அவர்கள் மனதிலிருந்து அடியோடு துடைத்தெறியும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நல்வழிகளையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் விழிப்புணர்வுப் பயிலரங்குகளை நடத்தி, அவர்களிடம் மனமாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com