

சென்னை,
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் 21,669 தொட்டிகளில் 1,413 டன் வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கும், சாலைகளில் மிதக்கும் கழிவுகள் மழைநீர் வடிகால்களில் நுழைவதைத் தடுப்பதற்கும், வண்டல் மண் சேகரிக்கவும் மழைநீர் வடிகால்வாய்களில் 5 மீ இடைவெளியில் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 1,09,741 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வண்டல் வடிகட்டித் தொட்டிகளின் மூடியானது குப்பைகளை தொட்டியில் செல்வதைத் தடுத்து மழைநீர் மட்டும் தொட்டியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு, வண்டல் மண் சேகரிக்கப்படுகிறது. வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலிருந்து இரண்டு குழாய்கள் மூலம் மழைநீர் தங்குதடையின்றி மழைநீர் வடிகால்களில் சீராகச் செல்லும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மாநகராட்சி மூலமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள 1,09,741 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 17.06.2026 வரையிலான கடந்த 15 நாட்களில் 21,669 வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,413 டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது. வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.