

சென்னை,
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேரிடர் மேலாண்மை பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தல்.
ஆய்வுக் கூட்டம்
இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
மண்டல இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், மற்றும் அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ரெயில்வே, மின்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உள்ளிட்ட சேவை துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பேசும்போது தெரிவித்ததாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 1.10 லட்சம் வண்டல் சேகரிப்பு தொட்டிகள் தூர்வாரப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்தி முடித்திட வேண்டும். இப்பணிகள் முடிவடையாத இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அருகிலுள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களுக்கு செலுத்தி அகற்றிட வேண்டும். அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சியில் 44 நீர்வழி கால்வாய்கள், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஏரிகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரி அகற்றிட வேண்டும்.
மழையினை முன்னிட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கும் பணியினை விரைந்து முடித்திட வேண்டும். வெளியில் தெரியும் மின் கேபிள்களை நிலத்திற்குள் பதித்திட வேண்டும். மின்சாரம் தாக்கி எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும்.
ரெயில்வேக்கு சொந்தமான 28 ரெயில்வே சிறு பாலங்கள் பகுதியில் தூர்வாரும் பணியினை முழுமையாக முடித்திட வேண்டும். மேலும் ரெயில்வே பகுதியில் உரிய கவனம் செலுத்தி மழைநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 219 இடங்களிலும் உடனடியாக மழைநீரை வெளியேறும் வகையில் மோட்டார் பம்புகள தயார் நிலையில் வைத்திட வேண்டும். பல்வேறு உயர் திறன் கொண்ட மோட்டார்கள் உள்பட மொத்தம் 1320 மோட்டார்கள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி தாழ்வான எந்த ஒரு இடத்திலும் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்றிட வேண்டும். 24 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேக்கத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
65 ஆயிரம் ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளன. இப்பணி மிகவும் முக்கியமானது, இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
215 நிவாரண மையங்கள், 116 சமையல் கூடங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளதை மீண்டும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.
36 மாநகராட்சி படகுகள் மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைப்புடன் 275 படகுகள் மற்றும் அதனை இயக்குபவர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களது சேவையினை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேரிடர் மேலாண்மை பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.