சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு

வார்டு ஒன்றுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டர் இன்று (28.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், (வருவாய் (ம) நிதி), அஃதாப் ரசூல், (தெற்கு வட்டாரம்), ஸ்வேதா சுமன், (வடக்கு வட்டாரம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் கட்டுதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் தூர்வாருதல், ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றுதல், நீர் நிலைகள் மேம்பாடு, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளைக் கத்திரித்து அகற்றுதல், நீர்த் தேக்கத் தொட்டிகள், நீர் வெளியேற்றும் மோட்டார்கள் பராமரிப்புப் பணிகள், வாகனங்கள் இயந்திரங்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.100 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.22.46 கோடி மதிப்பீட்டில் 1,671 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக வார்டு ஒன்றுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை ஒட்டுப் பணிகள் மற்றும் சாலையை சீர்செய்வதற்காக பகுதி வாரியாக ஒப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்கு ஏதுவாக 150 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் மற்றும் வாடகை 500 ட்ராக்டர் மீது பொறுத்தப்பட்ட பம்புகள் அடிப்படையில் பயன்படுத்துவதற்கு மொத்தம் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மின்சார மோட்டார்களில் ஏதேனும் பழுது இருந்தால் சரிசெய்வதற்கு மண்டலத்திற்கு ஒரு இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய 15000 எண்ணிக்கையிலான Emergency kit ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் .

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரூ.4.65 கோடி மதிப்பில் பம்ப் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குவதற்கான தற்காலிக பணியாளர்கள் நியமித்தல். பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரூ.15 இலட்சம் மதிப்பில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com