

தேனி,
வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் போக்கு காட்டுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எல்நினோ தாக்கம் காரணமாக தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அடியோடு பொய்த்து விட்டது. இதனால் மாவட்டத்தில் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. குறிப்பாக பிரதான அணையான வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமாக ஜூன் மாதம் திறக்க வேண்டிய முதல்போக நெல் சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த வாரம் நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து முதல்போக பாசனத்திற்காக 5 மாதங்கள் தாமதமாக கடந்த வாரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையும் தற்போது வரை குறிப்பிடும்படி பெய்யவில்லை. சரிவர பெய்யாமல் போக்கு காட்டி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
தற்போது வரை வடகிழக்கு பருவமழை கை கொடுக்காத நிலையில், பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பொய்த்துபோனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 54.79 அடி யாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிக்கும் நிலையில், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 886 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.