

கடலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி, அனைத்து துறை அலுவலர்களுடன் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அறிவுரை
தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். முன்னதாக நில நிர்வாக ஆணையர் நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் வெங்கடாசலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையர் ஜான் லூயிஸ் ஆகியோர் திட்ட விளக்க உரை யாற்றினர். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் நன்றி கூறினார்.
278 இடங்கள்
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய மாவட்டம். இதை கவனத்தில் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களை அழைத்து கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி இந்த கூட்டம் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதியாக 278 இடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது. 1 லட்சம் பேர் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்களில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வலியுறுத்தி உள்ளோம்.
மீட்பு படையினர்
அவசர காலத்தில் தொடர்பு கொள்ள 1077 கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அளிப்பவர்கள் 5 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு, குறுவட்ட, கோட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேசிய, மாநில மீட்பு படையினர் 2 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது. வெள்ள நீர் வடிகால் 335 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டு உள்ளது. கால் வாய்கள் 3521 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. இதர வாய்க்கால்கள் 114 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசும், மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.