நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் இன்று முழு அடைப்பு ; ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

நூல் விலை உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் இன்று முழு அடைப்பு ; ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலுக்கு நூல் மிகவும் முக்கியம். கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.50 கூடியது. இதுவரை மொத்தம் ரூ.120 வரை அதிகரித்துள்ளதால் பனியன் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நூல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தக்கோரியும், தொழில் சிக்கல் மற்றும் நெருக்கடிகளை தீர்க்க மாநில அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டீமா சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டெக்மா, டெக்பா, பவர்டேபிள், பிரிண்டிங் பட்டறை, சாய, சலவை பட்டறைகள், ரைசிங், காஜாபட்டன், செக்கிங் உள்ளிட்ட அனைத்து பின்னலாடைத்துறையினரும் இடம்பெற்றுள்ளனர்.

நூல் விலையை அரசு கட்டுப்படுத்தக்கோரி முதல்கட்டமாக திருப்பூரில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில்துறையினர் முழு ஆதரவு தெரிவித்துள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வேலைநிறுத்தம் நடக்கிறது. அதுபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் இன்று முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளன.

உண்ணாவிரதம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 9.30 மணிக்கு தொடங்கியது இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com