சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை
Published on

சென்னை,

சென்னையில் மக்கள் பலர் சமீப நாட்களாக பல்வேறு உடல் உபாதைகளுடன் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்வது அதிகரித்து உள்ளது. அதன்படி பலர் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை, ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சென்னையில் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக, சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

இவை மழைக்கால நோய்களாகும். சில சமயங்களில் மழைநீரோ அல்லது கழிவுநீரோ, குடிநீருடன் கலந்து விடும்போது, அதில் இருக்கும் கிருமிகள் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே தண்ணீரை எப்போதும் காய்ச்சி குடிக்க வேண்டும். அதேபோல் சமைக்கும் போது காய்கறிகளை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

காலரா பாதிப்பு இல்லை

இது போன்ற வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீர் சத்து அதிகளவில் குறைந்துவிடுகிறது. எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உயிர்காக்கும் மருந்தான, உப்பு கரைசல் நீரை பொதுமக்கள் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் ஏற்படும் நீர் இழப்பு தடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் தினசரி 1,062 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் நேற்று முன்தினம் மட்டும் 23 ஆயிரத்து 760 பேர் சிகிச்சை பெற்றனர்.இதில் தோல் வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. பாதிப்பு கண்டறியப்படும் நபர்களின் வீடுகளில் தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை காலரா போன்ற பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு, அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com