சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது

சென்னை பெருநகர காவல்துறை 'ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது
Published on

சென்னை,

தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை 'ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு ஆபரேஷன் முடுக்கிவிடப்பட்டது.

சென்னையின் முக்கிய காவல் மண்டலங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நேற்று இரவு முழுவதும் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தி.நகரில் மட்டும் 18 ரவுடிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகள், புளியந்தோப்பில் 20 ரவுடிகள், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளை ரகசிய இடங்களில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறப்பு சோதனையின்போது சாதாரண குற்றவாளிகள் மட்டுமின்றி, சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள் குறிவைத்து தூக்கப்பட்டனர். நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தி, விற்பனை செய்து வந்த ரவுடி கும்பல்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. பழைய குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீண்டும் ஏதேனும் பெரிய சதித்திட்டங்களிலோ அல்லது கொலை, கொள்ளை போன்ற கொடூரக் குற்றங்களிலோ ஈடுபடாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"சென்னையில் பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாயும். ரவுடிசத்தை ஒழிக்க இதுபோன்ற திடீர் சோதனைகளும், 'ஸ்பெஷல் ஆபரேஷன்களும்' வரும் நாட்களிலும் தொடர்ந்து மிகத் தீவிரமாக நடத்தப்படும்" என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com