தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்காது-மாநில தலைவர் பேட்டி

கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று தொடங்கியது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்காது என மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.
தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்காது-மாநில தலைவர் பேட்டி
Published on

கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று தொடங்கியது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்காது என மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

கல்குவாரிகள்

தமிழ்நாடு கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 3,500 கிரசர்களும் செயல்பட்டு வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 22 குவாரிகளும், 23 கிரசர்களும், கரூர் மாவட்டத்தில் 55 குவாரிகளும், 100-க்கும் மேற்பட்ட கிரசர்களும், புதுக்கோட்டையில் 50 குவாரிகளும், 75 கிரசர்களும், பெரம்பலூரில் 45 குவாரிகளும், 95 கிரசர்களும் உள்ளன.

2016-ம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதன் விளைவாக தற்போது குவாரி தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் கல்குவாரி நடத்துபவர்களை அச்சுறுத்தி வருகிறார்கள். இந்த தொழில் செய்பவர்கள் திருடர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. அனுமதி பெற்று கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கும்போது, எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பணத்தை அரசுக்கு செலுத்திவிடுவோம்.

அச்சுறுத்தல்

ஆனால் இப்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் கற்கள் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பதோடு, அபராதமும் விதிக்கிறார்கள். எங்காவது சிறு விபத்து ஏற்பட்டால் குவாரியையே மூடிவிடக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. ஆகவே அரசு அதிகாரிகளின் அத்துமீறிய அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்களில் சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமவளத் திருட்டு நடக்கிறது. இதன் மூலம் அரசு அதிகாரிகள் பெரும்அளவில் பயன்பெற்றுள்ளார்கள். அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

கல்குவாரியை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். கல்குவாரி குத்தகை பெற விண்ணப்பித்தால் காலதாமதமின்றி விரைந்து உரிமம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரசர்களும் இயங்காது. அதேபோல் கல்குவாரிகளில் இயங்கும் லாரிகளும் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது செயலாளர்கள் தனசேகர், ஜெயராமன், துணை பொதுச்செயலாளர் முத்துகோவிந்தன், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com