

சென்னை,
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்த நிலையில், பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதனிடையே, தீபாவளியின்போது பட்டாசு வெடித்து சில விபத்துகளும் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் பட்டாசு வெடித்து சுமார் 650-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை 54 அவசர அழைப்புகள் வந்ததாகவும், இதர தீ விபத்துக்கள் தொடர்பாக 37 அவசர அழைப்புகள் என மொத்தம் 91 அவசர அடைப்புகள் வந்ததாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக 679 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 329 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 198 குழந்தைகள் என மொத்தம் 569 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், அதில் 86 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் என 110 பேர் பட்டாசு வெடித்தது தொடர்பான தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.