

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வில் 81.1 சதவீதம் தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வை எழுதுவதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 4.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து, இன்று நடைபெற்ற தேர்வில் மொத்தம் 3,97,293 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அதே நேரத்தில், 92,595 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதன் மூலம் விண்ணப்பித்தவர்களில் 81.1 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். சுமார் 18.9 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.