கடந்த சில ஆண்டுகளைவிட அதிகம்: சென்னையில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு மிகவும் மோசம்

தீபாவளி தினத்தன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மூலம் சென்னையில் காற்று மாசு மிகவும் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளைவிட அதிகம் என்றும் கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளைவிட அதிகம்: சென்னையில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு மிகவும் மோசம்
Published on

சென்னை,

தீபாவளி என்றால் பட்டாசுதான். அது இல்லாத தீபாவளியை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுப்ரீம் கோர்ட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம் எடுத்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்ற உத்தரவை கடுமையாகப் பின்பற்ற மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோட்டு உத்தரவிட்டது. அதை நடைமுறைப்படுத்த அரசும் ஆணையிட்டு இருந்தது.

ஆனால் தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய தினமும் வழக்கம்போல் மக்கள் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் புகைமூட்டமாக காட்சி அளித்தன.

காற்றில் மாசு

சென்னையைப் பொறுத்தவரையில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையில் சுற்றுப்புற காற்றின் தரத்தையும், ஒலி மாசு அளவையும் கண்டறிய பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய 5 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், சென்னை மாநகரில் காற்றின் தர குறியீட்டு அளவு 342-ல் இருந்து 385 வரை இருந்தது. அதன்படி பார்க்கையில் சென்னையில் காற்று மாசு அதிகமாக பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக தியாகராயநகரில் 385 என்ற அளவு பதிவாகியது.

வளிமண்டல காற்று மற்றும் காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகமாக காணப்பட்டதற்கு, மிகவும் குறைந்த காற்றின் வேகம், காற்றில் காணப்பட்ட அதிகப்படியான ஈரப்பதம், பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகை மற்றும் நுண்துகள்கள் வெகுநேரம் காற்றில் மிதந்து, விரைவாக படியாமலும், சூழலில் எளிதில் கிரகிக்க இயலாமலும் போனதுதான் காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமான அளவு

பொதுவாக காற்றின் தரக்குறியீடு அதன் அளவுகளைப் பொறுத்து 6 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில் 0 முதல் 50 என்ற அளவு வரை நல்ல காற்று, 51 முதல் 100 என்ற அளவு வரை மிதமான மாசு உள்ள காற்று, 101 முதல் 200 என்ற அளவு வரை உடல் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமற்ற காற்று, 201 முதல் 300 என்ற அளவு வரை ஆரோக்கியமற்ற காற்று, 301 முதல் 400 என்ற அளவு வரை மிகவும் ஆரோக்கியமற்ற காற்று, 401 முதல் 500 என்ற அளவு வரை அபாயகரமான காற்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னையில் தீபாவளி தினத்தன்று பதிவான காற்று தர குறியீட்டு அளவுப்படி, இது மிகவும் மோசமான அளவு என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வளிமண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன் 55 டெசிபலில் இருந்து 66 டெசிபல் வரையிலான அளவில் இருந்தது. இது தீபாவளி தினத்தன்று 69 டெசிபலில் இருந்து 79 டெசிபல் வரையில் காணப்பட்டது.

தீபாவளிக்கு மறுநாளான நேற்று எடுக்கப்பட்ட காற்றுத்தர குறியீட்டின்படி 142 என்ற அளவில் குறைந்து காணப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சென்னையில் தீபாவளி தினத்தன்று காற்று தரக்குறியீட்டு அளவு உயர்ந்து, காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com