

சென்னை
கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த நான்கு மாதங்களில் அதிக பணிகளை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டியின்போது கூறினார்.
சென்னையில் 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தற்பொழுது தயாராக இருக்கின்றன. பருவமழைக்கு தேவையான குறிப்பாக பருவமழையால் வரக்கூடிய நோய்களுக்கு மருந்துகள் உடனடியாக அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் மருத்துவமனைக்குள்ளேயே மழை நீர் வந்த சூழல் பார்த்திருக்கிறோம். அதனை நாங்கள் தடுத்து வருகிறோம்.
கடந்த ஆட்சியில் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதால் பல்வேறு இடங்களில் மழைநீர் நுழைந்து மருத்துவமனையை சூழ்ந்துள்ளன. அதனை எல்லாம் நடக்காத வண்ணம் நாங்கள் பார்த்து வருகிறோம்.
பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவையான அளவிற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அரசு வழங்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். வெள்ள நீரில் இறங்க கூடாது.
அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும். கடந்த ஆட்சியில் தூய்மையான குடிநீர் கிடைப்பதே விஷயமாக இருந்தது. எனவே மக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆட்சியில் 90 சதவீதம் நிறைவு பெற்றது, 95 சதவீதம் நிறைவு பெற்றது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த நான்கு மாதங்களில் அதிக பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.