சென்னையில் மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை? - அதிகாரிகள் விளக்கம்

சென்னை மாநகராட்சி ஊழியர்களின் இந்த முயற்சி பேசுபொருளாக மாறியது.
சென்னை,
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. கொசுக்கடி காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் பரவி வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அதாவது, மழைநீர் வடிகால்வாயில் உள்ள தொட்டிகளின் மூடியை திறந்து அதில் கொசுவலை போர்த்தி அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. அதை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சென்னை மாநகராட்சி ஊழியர்களின் இந்த முயற்சி பேசுபொருளாக மாறியது.
இதுதொடர்பான விமர்சனங்களும், கேலி கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலானது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்தை தொடர்புபடுத்தி வீடியோக்கள் அதிக அளவு பரவின. நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்தநிலையில், மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தியது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், இந்த சம்பவம் திருவொற்றியூர் மண்டலத்தில் நிகழ்ந்தது. மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்துவது கொசுக்களுக்காக போடுவது கிடையாது. கவுன்சிலர் ஒருவர் வேண்டுகோள் வைத்ததால் போடப்பட்டது.
மாநகராட்சியில் சார்பில் அறிவிப்பாக வெளியிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை. ஒரு கவுன்சிலர் ஆலோசனை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போட்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு சா்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.






