நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்
Published on

மோட்டார் சைக்கிள் பந்தயம்

சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், ஆங்காங்கே பாலம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், சாலை சந்திப்பு, பாலம் கட்டுமானப் பணி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ஒருசிலர் இந்த சாலையில் ஆபத்தான பயணம் மேற்கொன்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் குறைந்த அளவிலான போக்குவரத்து நடைபெறுவதால் வெறிச்சோடிய சாலைகளை சாதகமாக பயன்படுத்தி இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஓட்டுநர் உரிமம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் மாறிவருகிறது. பள்ளி செல்வது, டியூசன் செல்வது என தொடர்ச்சியாக உயர் வகுப்பு மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பல பெற்றோர் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் பல சிறுவர்கள் வாகனங்களில் பறக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில பெற்றோர் அதிக இழுவைத்திறன் கொண்ட ரேஸிங் பைக் எனப்படும் பந்தய மோட்டார் சைக்கிள்களை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர்.

விபத்துக்கள் ஏற்படும் நிலை

இவற்றை ஓட்டும் இளைஞர்கள் வீலிங் எனப்படும் ஒரு சக்கரத்தில் ஓட்டுவது, கைகளை விட்டு விட்டு ஓட்டுவது, அதிவேகத்தில் ஓட்டுவது என சாகசங்கள் செய்து வருகின்றனர்.

அத்துடன் நான்கு வழிச்சாலையை பந்தய மைதானமாக்கி ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். ஹெல்மெட் உள்ளிட்ட எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

ரோந்து அவசியம்

நகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்துப் பணி மேற்கொள்வதால் தற்போது நான்கு வழிச்சாலையை பந்தய களமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த சாலையில் திடீர் திடீரென்று அதிக இரைச்சலுடன் மின்னல் வேகத்தில் பாயும் மோட்டார் சைக்கிள்களைப் பார்த்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அஞ்சும் நிலை உள்ளது. எனவே நான்கு வழிச்சாலையில் அவ்வப்போது போலீசார் ரோந்து மேற்கொண்டு அத்துமீறும் இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com