கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த தாய்-6 மாத பெண் குழந்தை

நெல்லை அருகே மாயமான தாய்-6 மாத பெண் குழந்தை கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்தனர். அவர்கள் தவறி விழுந்து இறந்தனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவருக்கும் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தை சேர்ந்த வளர்மதி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகா ரிஷா (4) மற்றும் பிறந்து 6 மாதமே ஆன வசுந்தரா ஆகிய 2 பெண் குழந்தைகள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வளர்மதி, தனது கைக்குழந்தை வசுந்தராவுடன் மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராதாபுரம் போலீசில் கடந்த 20-ந் தேதி புகார் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

நேற்று காலையில் கும்பிகுளத்தில் இருந்து சமூகரெங்கபுரம் செல்லும் வழியில் பழைய கல்குவாரி குட்டையில் 2 உடல்கள் மிதந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உடனடியாக ராதாபுரம் போலீசுக்கும், வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி, 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், குட்டையில் இறந்து கிடந்தது மாயமான வளர்மதி, அவரது கைக்குழந்தை வசுந்தரா என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு தகவல்களும் வெளியானது. அதாவது, வளர்மதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இதனால் பெட்டைகுளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு கண்ணன் அங்கு சென்று தனது மனைவி, குழந்தைகளை கும்பிகுளத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து கைக்குழந்தை வசுந்தராவுடன் வெளியேறிய வளர்மதி அங்குள்ள கல்குவாரி அருகே சென்றார். அப்போது, அவர் தவறி கைக்குழந்தையுடன் குட்டையில் விழுந்து இருக்கலாம். இதில் மூச்சுத்திணறி 2 பேரும் பரிதாபமாக இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வளர்மதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஷபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com