பிரசவத்தின்போது தாய், சேய் சாவு: கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு ‘தினத்தந்தி’ செய்தி அடிப்படையில் நடவடிக்கை

பிரசவத்தின்போது தாய், சேய் பலியான சம்பவம் தொடர்பாக ‘தினத்தந்தி’ வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரசவத்தின்போது தாய், சேய் சாவு: கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு ‘தினத்தந்தி’ செய்தி அடிப்படையில் நடவடிக்கை
Published on

சென்னை,

ஈரோடு மாவட்டம், ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சிறிதுகாலத்தில் காஞ்சனா கர்ப்பம் அடைந்தார். விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் முறையாக பரிசோதனை செய்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி காஞ்சனாவுக்கு பிரசவ வலி வந்தது. இவரை பரிசோதனை செய்து பார்த்த விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார மைய டாக்டர் விஜயலட்சுமி, விரைவில் குழந்தை பிறக்கும் என்று கூறினார்.

ஆனால், அதேநாள் பிற்பகலில் டாக்டர் விஜயலட்சுமி அங்கு இல்லை. நர்சு சுகன்யா மட்டும் இருந்தார். அவரிடம் காஞ்சனாவின் கணவர் ராஜ் விசாரித்தபோது, டாக்டர் சென்னைக்கு சென்று விட்டதாகவும், தான்தான் பிரசவம் பார்க்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் காஞ்சனாவுக்கு வலி அதிகரித்து, குழந்தை தலை பாதி மட்டும் வெளியில் வந்துள்ளது. மீதமுள்ள உடல் பாகம் வெளியில் வராததால், காஞ்சனாவை திங்களூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஆம்புலன்சில் தூக்கி சென்றனர்.

ஆனால், அங்குள்ள டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனாவும், பச்சிளம்குழந்தையும் இறந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. டாக்டர், நர்சு ஆகியோருக்கு எதிராக காஞ்சனாவின் கணவர் ராஜ், புதிய புகாரை மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

இதன் அடிப்படையில் ஆணையத்தின் பொறுப்பு தலைவர் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளை டாக்டர் தரப்பில் மறுக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் விஜயலட்சுமி மனித உயிரை காப்பாற்றும் பாதுகாக்கும் பணியில் உள்ளவர். ஆனால், அவர் தன்னுடைய பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். அதனால், காஞ்சனா என்ற 23 வயது இளம்பெண்ணும், பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். எனவே, டாக்டர் விஜயலட்சுமி மனித உரிமையை மீறி செயல்பட்டுள்ளார் என்று முடிவு செய்கிறேன்.

எனவே காஞ்சனாவின் கணவர் ராஜூக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். அதில் ரூ.5 லட்சத்தை டாக்டர் விஜயலட்சுமியிடம் இருந்து சட்ட விதிகளை பின்பற்றி வசூலிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, டாக்டர் விஜயலட்சுமி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் தெளிவான மருத்துவ அறிக்கையை தராத பிரசவ கால இறப்பு தணிக்கை குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் சவுண்டம்மாள், ராஜசேகர், லதா, மலர்விழி ஆகியோர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எல்லா சுகாதார நிலையங்களிலும், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் செல்போன் எண் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களின் தரத்தை உயர்த்த தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com