

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு அருள்ராஜ், தினேஷ் ஆகிய 2 மகன்கள். இருவரும் எலக்ட்ரீசியன்கள். 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ராஜாமணி இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த ஜானகி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த 2 மகன்களும் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் உள்ளே தாய் ஜானகி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாயின் உடலை கீழே இறக்கினார்.
தாய், தந்தையை இழந்த துக்கம் தாங்காமல் 2-வது மகனான தினேஷ் (வயது 24) மிகவும் சோகத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று விபரீத முடிவெடுத்து அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் என்ஜினில் சிக்கி சிதைந்தது.
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் வைத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.