

உடல்நிலை சரியில்லை
கரூர் கந்தபொடிகார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷாந்தி (28). இந்த தம்பதிக்கு தியாலினி (4) என்ற மகளும், ரூபன் (2) என்ற மகனும் இருந்தனர்.இந்நிலையில் வெங்கடேசன் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என நிஷாந்தியை அழைத்துள்ளார். அதற்கு அவர் எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் நான் வரவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் தனது பெற்றோருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார்.
வீட்டின் கதவை உடைத்தனர்
இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேசன் தனது மனைவி நிஷாந்திக்கு பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் வெங்கடேசன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் நிஷாந்தி கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
அங்கு நிஷாந்தி மற்றும் தியாலினி, ரூபன் ஆகியோர் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வெங்கடேசனுக்கும், கரூர் டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தாய் நிஷாந்திக்கு முதுகு தண்டுவட பிரச்சினையும், குழந்தை தியாலினிக்கு மூச்சுத்திணறல் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிஷாந்தி தனது 2 குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது 2 குழந்தைகளையும் கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.