2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று தாய் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு

கணவன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (38 வயது). இவரது மனைவி முத்துலெட்சுமி (27 வயது). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் முத்தமிழ் (4 வயது). சுசிலாதேவி (3 வயது) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் கறிக்குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்கமாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்துவிட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையில் முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள்கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த முத்துலெட்சுமியின் தாயார் சென்று தேடிப்பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணறு அருகே முத்துலெட்சுமியின் செருப்புகள் கிடந்ததை கண்டார். கிணற்றுக்குள் பார்த்தபோது கிணற்றில் 2 குழந்தைகளும் மிதந்தனர்.
உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கங்கைகொண்டான் தீயணைப்புத்துறையினர், கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களின் உடல்களை கைப்பற்றிய கங்கைகொண்டான் போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






