மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி இருவரும் எடுத்த விபரீத முடிவு

மகன்கள் இருவரும் குடித்து விட்டு சுற்றுகிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களது தாயார் இருவரையும் கண்டித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 49). இவரது மூத்த மகன் விக்னேஷ் (28), இளைய மகன் கணேஷ் (24). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் பெண்ணை காதலித்து வந்தார். இது குறித்து தாயார் ஜெயலட்சுமிக்கு தெரிய வரவே கணேசை அவர் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் விக்னேஷ் மற்றும் கணேஷ் இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். காதல் விவகாரம் ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் மகன்கள் இருவரும் தற்போது குடித்து விட்டு சுற்றுகிறார்களே என்ற ஆதங்கத்தில் ஜெயலட்சுமி இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகன்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கணேஷ் உயிரிழந்தார். மாலையில் விக்னேசும் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 மகன்களும் உயிரிழந்ததால் அவர்களின் உடல்களை பார்த்து ஜெயலட்சுமி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.






