பணம் கேட்டு மிரட்டியதால் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தாய்

திருவள்ளூர் அருகே பணம் கேட்டு மிரட்டியதால் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
பணம் கேட்டு மிரட்டியதால் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தாய்
Published on

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமம், நமச்சிவாயபுரம், கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (43 வயது). இவர் தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (27 வயது). இவருக்கு பாரதி (23 வயது) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு வேலை கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

அவர் தன்னுடைய தாய் ஜெயந்தியிடம் தான் புதிதாக தொழில் செய்ய உள்ளதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவிசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 24-ந்தேதியன்று காலை கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தன்னுடைய தாயாரிடம் தான் தொழில் செய்யபோவதாகவும், அதற்கு காலம் தாழ்த்தாமல் பணம் கொடுக்க வேண்டும் என்று தாயாரை பணம் கேட்டு தகராறு செய்து அவரை மிரட்டியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பணம் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்த ஜெயந்தி எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டில் இருந்து கொண்டு என்னையே மிரட்டுகிறாயா என்று தன்னுடைய மகனை தகாத வார்த்தையால் பேசி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடிதுடித்து கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவி பாரதி மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து பாரதி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை கைதுசெய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். வேலை இல்லாத காரணத்தால் புதிதாக தொழில் தொடங்க பணம் கேட்டு தாயை மகன் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாய் பெற்ற மகன் என்றும் பாராமல், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் தொடுகாடு பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com