

வேலூர்,
வேலூர் மாவட்டம் பாலூர் ஆலமரவட்டத்தை சேர்ந்தவர் முனியன் (55 வயது). கூலித்தொழிலாளி. இவரது 2-வது மனைவி ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முனியன் 3-வதாக கவிதா (45 வயது) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரியின் மகனான ஆட்டோ டிரைவர் அபிமன்யு (25 வயது) சென்னையை சேர்ந்த பிரதீபா (22 வயது) என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரதீபாவை, அபிமன்யு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாலூருக்கு அழைத்து வந்தார். இதற்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதீபாவை அடிக்கடி திட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரதீபாவிடம், கவிதா மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அபிமன்யு, அதே பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவும், ராஜேஸ்வரியின் தந்தையுமான சாமுண்டி (77 வயது) என்பவருக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி சாமுண்டி அங்கு சென்றார். அப்போது பிரதீபாவிடம் தகராறில் ஈடுபட்டிருந்த கவிதாவை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மேலும் ஆத்திரமடைந்த சாமுண்டி, தன்னிடம் இருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.