தொடர் மக்கள் பணியில் அப்பாவுக்கு பெருந்துணையாக இருக்கிறார் அம்மா - உதயநிதி ஸ்டாலின் பொன்விழா வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார்.
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம்தேதி திருமணம் நடைபெற்றது. 50-வது திருமண நாளை கொண்டாடும் அப்பா, அம்மாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா!
அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா! பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்!
அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






