

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் நேற்று இரவு 8 மணி அளவில் உடல் ஒன்று மிதப்பதை அந்த ஊரில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர்.
அப்போது மேலும் 3 உடல்கள் அங்கு மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்தனர். கிணற்றில் மிதந்த உடல்களை மீட்டனர். அதில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் உடல்கள் என்பது தெரியவந்தது. அந்த உடல்கள் யாருடையது என்று போலீசார் விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் மனைவி அம்சா (வயது 35), அவருடைய மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) என்பது தெரிய வந்தது.
அவர்களது உடல்களை மீட்ட போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கடந்த 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி அளவில் அம்சாவுக்கும், சரவணனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த அம்சா, தன்னுடைய 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அம்சாவின் பெற்றோர் வீடு அதே ஊரில்தான் உள்ளது. எனவே பெற்றோர் வீட்டுக்கு சென்று இருப்பார். சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று சரவணன் நினைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அம்சாவையும், குழந்தைகளையும் காணவில்லை.
எனவே சரவணன், அம்சாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு அம்சா குறித்து விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் இங்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். அதன்பிறகு இரு குடும்பத்தினரும் அம்சாவையும், குழந்தைகளையும் தேட தொடங்கினர். நேற்று முன்தினமும், நேற்றும் 4 பேரையும் தேடி வந்தனர்.இதற்கிடையே அம்சாவின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் அம்சா உள்பட 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு அம்சாவும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.