கள்ளக்காதலுக்கு இடையூறு: ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாய் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலைவாசன், விவசாயி. இவரது மனைவி லலிதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர்சன்ராஜ் (5 வயது), புவன்ராஜ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் திருமலைவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லலிதா தனது கணவரை பிரிந்து விட்டார். பின்னர் அவர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் சிறுவாச்சூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். அதே நேரத்தில் மூத்த மகன் ஹர்சன்ராஜ் தந்தையுடன் உள்ளான்.

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி குழந்தை புவன்ராஜுக்கு திடீரென வலிப்பு வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு லலிதா கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக கூறினார்.

இதனிடையே குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு லலிதா திடீரென மாயமானார். அதேநேரத்தில் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான லலிதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குழந்தையை கொன்றுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து லலிதாவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் சமீபகாலமாக பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக எனது ஒன்றரை வயது ஆண் குழந்தை இருப்பதாக கருதினேன். இதனால் எனது குழந்தைக்கு சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு விஷம் கொடுத்தேன்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்பார்கள் என்று கருதி அதற்கு வலிப்பு வந்து விட்டதாக கூறியபடி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று விட்டேன். அங்கு குழந்தை இறந்த நிலையில் நான் எனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டேன். பின்னர் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com